×

திருப்புத்தூரில் அதிக லோடு லாரிகளால் அக்கப்போர்

திருப்புத்தூர், ஜன.10: திருப்புத்தூர் பகுதிகளில் அதிக பாரத்துடன் வைக்கோல்களை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு அறுவடையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறுவடை முடிந்த பின்னர் கிடைக்கும் வைக்கோல் விற்பனைக்காக பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் போதிய தீவனம் கிடைக்காமல் இந்த வைக்கோலை மொத்தமாக வாங்கி ஏற்றிச்செல்கின்றனர். இதுபோன்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லாரியில் அளவுக்கு அதிகமாக வைக்கோலை ஏற்றிச்செல்வதால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக திருப்புத்தூர் பகுதிகளில் இதுபோன்ற அதிக லோடு வைக்கோல் லாரிகளை பார்க்க முடிகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. லாரியில் உள்ள வைக்கோல்கள் தாழ்வான மின்கம்பிகளில் உரசும் போது தீபற்றி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் வைக்கோல் லாரிகள் ரோட்டில் முன்னே செல்லும் போது, ரோட்டை முழுமையாக மறைக்கிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. வீணாக விபத்தில் சிக்குகின்றன.நேற்று திருப்புத்தூர் நகர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வைக்கோலை ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே இதுபோன்று அதிகளவு பாரத்துடன் வைக்கோலை ஏற்றிவரும் வாகனங்களை போலீசார் நகர் பகுதிக்குள் வருவதை தடைசெய்ய வேண்டும்; அவ்வாறு வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘திருப்புத்தூர் பகுதியில் தற்போது அறுவடை பணிகள் முடிந்து வைக்கோலை விற்பனைக்காக வெளியூர்களுக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் லாரிகள், டிராக்டர்களில் அதிகலோடு ஏற்றுகின்றனர். இருபுறமும் பிதுங்கிக்கொண்டு வைக்கோல்கள் தொங்குகின்றன. இதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனை தார்ப்பாய் கொண்டும் மூடுவதில்லை. வைக்கோல் காற்றில் பறந்து டூவீலர் ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போலீசார் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.




Tags : Accidents ,
× RELATED கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த...